தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

JR 2023 :       நேர்முகத்தேர்விற்க்கு தகுதியானவர்களின் மதிப்பெண்கள் மற்றும் தேர்வு நிலை வெளியிடப்பட்டுள்ளது.      இறுதி தற்காலிக தேர்வுப்பட்டியல் மற்றும் நிர்ணய மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

தலைவரின் செய்திகள்

chairman_img


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தை தலைமையேற்று நடத்திச் செல்வதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். தமிழ்நாடு காவல் துறைக்காக காவல் உதவி ஆய்வாளர்கள் (அனைத்து வகைகள்), இரண்டாம் நிலை காவலர்கள், தமிழக சிறைத் துறை இரண்டாம் நிலை காவலர்கள், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்காக தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுகளை இத்தேர்வு வாரியம் மிகவும் நம்பிக்கைகுரிய வகையிலும் பொறுப்புடனும் நடத்துகின்றது.

1991ம் ஆண்டு இத்தேர்வு வாரியம் தொடங்கப்பட்டது முதல் 8047 உதவி ஆய்வாளர்கள், 1,06,881 இரண்டாம் நிலை காவலர்கள், 3983 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் 6460 தீயணைப்பாளர்களையும் தேர்வு செய்துள்ளது. மேலும், 10,099 தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினரைத் தேர்வு செய்ததுடன் அவர்களை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலை காவலர்களாக உட்கொணரவும் இவ்வாரியத்தால் சிறப்பான முறையில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் உதவி ஆய்வாளர், இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்ய முனைப்புடன் செயலாற்றி வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சமீபத்தில் 968 காவல் உதவி ஆய்வாளர்களை (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை) தேர்வு செய்து அதன் முடிவுகளை கடந்த 15.04.2021-ல் வெளியிட்டுள்ளது. மேலும் 11,813 இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களை தேர்வு செய்து அதன் முடிவுகளையும் 26.11.2021-ல் வெளியிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக, தேர்வு நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாகவும், திறமையாகவும் நவீன தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியும் நடத்தப்படுகிறது. 2015ம் ஆண்டு முதல் இணையவழி விண்ணப்பம் செய்யும் நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 52 எண்முறை உயரம் அளத்தல் கருவிகளை வாங்கி பயன்படுத்துவதின் மூலம் உயரம் அளத்தலில் மனிதத்தவறுகளுக்கு இடமின்றி முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளம் தற்போதைய தேவைக் கேற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) பதவிகளுக்கான அடுத்த தேர்வில் இணையவழி மூலம் எழுத்துத் தேர்வு நடத்த முன் மொழியப்பட்டுள்ளது. மேலும், இணையவழி எழுத்துத் தேர்வு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தினால் எதிர்காலத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சீருடைப் பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதில் நாட்டிலுள்ள தேர்வு முகமைகளுள் மிகச் சிறந்ததாகத்திகழ்கிறது. இத்தேர்வு வாரியம் மிக நீண்ட வரலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இத்தேர்வு வாரியம் மிகச்சிறந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை மாநிலத்தின் பல்வேறு சீருடைப்பணிகளுக்கு வெளிப்படையாகவும், நியாயமாகவும், அதிநவீன முறையிலும் தேர்வு செய்து தருவதில் மிகச் சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியமாகிய நாங்கள் தொடர்ந்து நியாயமான, வெளிப்படையான மற்றும் உயர்தரத்திலான ஆட்சேர்ப்பு செயல்முறைகளைக் கடைப்பிடித்து இனிவரும் தேர்வுகளிலும் நடுநிலையோடு சிறப்புடன் செயலாற்றுவோம்.


சீமா அக்ரவால், இ.கா.ப.,
இயக்குநர்/தலைவர்,
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம்,,
சென்னை – 08, தமிழ்நாடு.
 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்